மாசித்திருவிழா கொடியேற்றம்


மாசித்திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 8 Feb 2022 10:07 PM IST (Updated: 8 Feb 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

பழனி:
பழனி கிழக்கு ரத வீதியில் முருகன் கோவிலின் உப கோவிலாக விளங்கும் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் 12-ம் நாளான நேற்று இரவு மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, சிறப்பு யாகம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடிப்படம் கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கொடிமரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாரியம்மன், கோவில் உள்பிரகாரத்தில் வலம் வருதல், அக்னி சட்டி எடுத்து கம்பத்தில் வைத்தல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மாரியம்மன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
கொடியேற்ற நிகழ்ச்சிகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்திருந்தனர். இதில் கோவில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி வருகிற 15-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 16-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேரோட்ட நிகழ்ச்சிக்கு 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூச்சொரிதல், வண்டி கோமாளி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story