ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2,400 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2,400 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தேங்காய் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரவை கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என்ற விலைக்கு மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளது.
வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடப்பு பருவத்தில் தலா 1,200 டன் வீதம் 2,400 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற ஜூலை மாதம் வரை செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கிக்கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழுடன் வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்து பயன்பெறலாம். விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் வணிக துணை இயக்குனர், வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story