சென்னை முதலை பண்ணையில் இருந்து 1,000 முதலைகள் குஜராத் செல்கின்றன


சென்னை முதலை பண்ணையில் இருந்து 1,000 முதலைகள் குஜராத் செல்கின்றன
x
தினத்தந்தி 9 Feb 2022 6:32 PM IST (Updated: 9 Feb 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னை முதலை பண்ணையில் இருந்து 1,000 முதலைகள் குஜராத் செல்கின்றன. பெட்டிகளில் அடைத்து லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சென்னை,

சென்னையை அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலை பண்ணை உள்ளது. இங்கு 17 வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆசிய கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் முதலை பண்ணையாக இவை திகழ்கிறது. இங்கு பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள், சதுப்பு நில முதலைகள் ஆகும்.

கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த முதலை பண்ணை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்த முதலை பண்ணையில் முதலைகளுக்கு ஒரு நாளைக்கு கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி என 500 கிலோ இறைச்சி வரை உணவாக வழங்கப்பட்டு வந்தது. பார்வையாளர் வரத்து குறைந்ததால் வருமானம் தடைபட்டது. இதனால் முதலைகளை பராமரிக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் நிர்வாகத்தினர் பரிதவித்து வந்தனர்.

இதையடுத்து இங்குள்ள முதலைகளை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று முதலை பண்ணை நிர்வாகத்தினர் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இதனை ஏற்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தது. இதனை ஏற்று கரியால் வகை முதலைகள், நன்னீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள் என பல்வேறு வகைகளை சேர்ந்த 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என மொத்தம் 1,000 முதலைகளை இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

அவற்றை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக முதலை பண்ணையில் இருந்து முதலைகளை பாதுகாப்பாக மரப்பெட்டியில் அடைத்து குஜராத் மாநிலத்துக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

Next Story