கந்துவட்டி கொடுமையால் தம்பதி தீக்குளிக்க முயற்சி


கந்துவட்டி கொடுமையால் தம்பதி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 Feb 2022 7:07 PM IST (Updated: 9 Feb 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் தம்பதி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தேனி: 

தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் தவமணி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 45). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று இவர்கள் இருவரும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது மகாலட்சுமி ஒரு பாட்டிலில் மண்எண்ணெய்யை மறைத்து எடுத்து வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு திடீரென அவர்கள் தங்களின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மகாலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர், "நான் ஒருவரிடம் குடும்ப தேவைக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அதற்கான வட்டியை செலுத்தி வந்தேன். வாங்கிய கடனுக்கு ஈடாக எனது நிலத்தை அவர் பெயரில் பத்திரம் பதிந்து வாங்கிக் கொண்டார். இந்நிலையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்திவிட்டு பத்திரத்தை ரத்து செய்யுமாறு கூறினேன். ஆனால், அவர் மேலும் ரூ.20 லட்சம் கொடுக்கவில்லை என்றால் பத்திரப்பதிவை ரத்து செய்ய மாட்டேன் என்று மிரட்டுகிறார். வட்டியை முறையாக கொடுத்து விட்டு அசல் பணத்தை செலுத்திய போதிலும் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். இதனால் தற்கொலைக்கு முயன்றோம்" என்றார். இதையடுத்து அவரையும், அவருடைய கணவரையும் விசாரணைக்காக போடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story