வாடகை கார்டிரைவர் கொலை
வாடகை கார்டிரைவர் கொலைவடவள்ளி அருகே வாடகைக்கு சென்ற கார்டிரைவர் கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
வடவள்ளி
கோவை வடவள்ளி அருகே ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தினசரி அப்பகுதி சாலையோரத்தில் நடைபயிற்சி சென்று வருவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் சிலர் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தொண்டாமுத்தூர் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி அருகே கார் ஒன்று தனியாக வெகு நேரமாக நின்றிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது காருக்கு பின்னால் சாலையோரமாக வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அங்கு கிடந்த வாலிபர் உடலை ஆய்வு செய்தனர். பின்னர் அவர் யார்? என்பதை அறிய காரில் ஏதாவது தடயங்கள் இருக்கிறதா எனத் தேடி பார்த்தனர். அப்போது அவரது உடல் அருகே டிரைவிங் லைசன்ஸ் கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் சானு என்று பெயர் இருந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் வெள்ளலூர் மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மகன் சானு (வயது31) என்பதும், கால் டாக்ஸி டிரைவராக இருந்ததும் தெரியவந்தது. நேற்று மாலை சானுவின் செல்போனுக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், வாடகை கார்கேட்டு ஓணாப்பாளையத்திற்கு வரவழைத்துள்ளார்.
இதனால் சானுவும் காரை எடுத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளார். இந்த நிலையில்தான் அவர் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாடகை கார்கேட்டு சானுவை அழைத்தவர்கள் யார்? உண்மையிலேயே வாடகைக்கு அழைத்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக வேறு யாரேனும் வாடகைக்கு அழைப்பது போல் அழைத்து கொலை செய்து விட்டு சென்று விட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.
வாடகை கார் டிரைவரான சானுவிடம் 2 செல்போன்கள் இருந்துள்ளது. அந்த போன்கள் காருக்குள் இருக்கிறதா என்று போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் அந்த செல்போன்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் கொலையாளிகள் செல்போன்களை எடுத்து சென்றிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆகவே பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கால்டாக்ஸி டிரைவர்கள் பலர் திரண்டனர். பின்னர் அவர்கள், சானுவின் மரணம் குறித்து விரைவாக விசாரணை நடத்திட வேண்டும். அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். மேலும் சாய்பாபா காலனியில் உள்ள கால்டாக்சி நிறுவனத்திலும் முற்றுகையில் ஈடுபட்டனர். டிரைவரின் மர்மசாவு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






