மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 10 Feb 2022 6:40 PM IST (Updated: 10 Feb 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி

நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்

பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. இங்கு ஆண்கள் 39,543 பேரும், பெண்கள் 42,777 பேரும், மற்றவை 33 சேர்த்து மொத்தம் 82,353 பேர் உள்ளனர். இதேபோன்று சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில்.... வார்டுகள் உள்ளன. இங்கு ஆண்கள் 9468 பேரும், பெண்கள் 10095 பேரும், மற்றவை 1 சேர்த்து மொத்தம் 19,504 பேர் உள்ளனர். ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் ஆண்கள் 7441 பேரும், பெண்கள் 8191 பேரும், மற்றவை 3 சேர்த்து மொத்தம் 15,535 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்கு பொள்ளாச்சி நகராட்சி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்குச்சாவடிகள்

பொள்ளாச்சி நகராட்சியில் 89 வாக்குச்சாவடிகளும், ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் 20 வாக்குச்சாவடிகளும், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 22 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த நிலையில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
நகராட்சியில் 11 பெட்டிகளில் 107 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 107 கட்டுப்பாட்டு எந்திரங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதேபோன்று சூளேஸ்வரன்பட்டியில் 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 27 கட்டுப்பாட்டு எந்திரங்களும், ஜமீன்ஊத்துக்குளியில் 24 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 24 கட்டுப்பாட்டு எந்திரங்களும் வந்து உள்ளன. சின்னங்கள் பொருத்தும் பணியின் போது வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அறை திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வால்பாறை

வால்பாறை நகராட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலகத்தில் தனியறையில் வைக்கப்பட்டது.
வால்பாறை நகராட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 73 வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் பயன்படுத்துவதற்காக 88 மின்னணு வாக்கு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இறக்கி தனியறையில் வைக்கப்பட்டது. வருகிற நாட்களில் இந்த அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்பாளரின் பெயருடன் சின்னம் பொறுத்தப்பட்டு வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story