தொழிலாளி கழுத்தை அறுத்த மனைவி உள்பட 2 பேர் கைது


தொழிலாளி கழுத்தை அறுத்த மனைவி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 10:55 PM IST (Updated: 10 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் தொழிலாளியின் கழுத்தை அறுத்த மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம்: 


கட்டிட தொழிலாளி
பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இன்பராஜ் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் இன்பராஜுக்கு அதே தெருவை சேர்ந்த அவருடைய உறவினரான ஆனந்தி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்பராஜ் தாமரைக்குளம் கண்மாய்க்கு வந்தார். அங்கு மனைவி முத்துலட்சுமியை வரும்படி அவர் கூறினார். இதேபோல் உறவினரான ஆனந்தியையும் அங்கு வரச் சொன்னார். இருவரிடமும் சமரசம் பேச இன்பராஜ் முயன்றதாக தெரிகிறது. 

கழுத்து அறுப்பு
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துலட்சுமியும், ஆனந்தியும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த சிறிய கத்தியால் இன்பராஜ் கழுத்தை அறுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
இதையடு்த்து இன்பராஜ் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மனைவி உள்பட 2 பேர் கைது 
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்பராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்பராஜ் மனைவி முத்துலட்சுமி, உறவினர் ஆனந்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story