தேர்தல் பணியில் 2,016 அலுவலர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 2016 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் கூறினார்.
சிவகங்கை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 2016 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் கூறினார்.
அலுவலர்கள்
வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான 2-ம் கட்ட சிறப்பு வகுப்புகள் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவின்படி 19-ம் தேதி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு 420 வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.
இதற்காக 2,016 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களுக்கு கடந்த வாரம் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2-ம் கட்டமாக சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காரைக்குடி ஆர்.எம்.எஸ்.ராமநாதன் செட்டியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
பயிற்சி வகுப்பு
இதில் சிவகங்கை நகராட்சி, மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி, திருப்புவனம் பேரூராட்சி, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்களுக்கு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காரைக்குடி நகராட்சி, தேவகோட்டை நகராட்சி மற்றும் கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளுக்கும் வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்களுக்கு காரைக்குடி ஆர்.எம்.எஸ். ராமநாதன் செட்டியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகின்றன. இதனை தொடர்ந்து, 3-வது கட்ட பயிற்சிகள் தேர்தலுக்கு முதல்நாள் 18-ம்தேதி அன்று அலுவலர்கள் பணி மேற்கொள்ள உள்ள இடத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story