இயல், இசை, நாடக முப்பெரும் விழா தொடங்கியது
தஞ்சை தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் இயல், இசை, நாடக முப்பெரும் விழா தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் இயல், இசை, நாடக முப்பெரும் விழா தொடங்கியது.
முப்பெரும் விழா
இந்திராகாந்தி தேசிய கலை மையம், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் இந்திய தொல்லியல் துறை இணைந்து 75-வது ஆண்டு இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தஞ்சை தென்னகப்பண்பாட்டு மைய வளாகத்தில் "தஞ்சாவூர் உற்சவம் என்ற பெயரில் இயல், இசை, நாடகம் முப்பெரும் விழா நேற்று காலை தொடங்கியது.
விழாவிற்கு பெங்களூரூவில் உள்ள இந்திராகாந்தி தேசிய கலை மைய மண்டல இயக்குனர் அட்சல் பாண்டியா தலைமை தாங்கினார்.
பயிற்சி பட்டறை
இந்திராகாந்தி தேசிய கலைமைய அறங்காவலர் பத்மா சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்திராகாந்தி தேசிய கலை மையம் உறுப்பினர் செயலாளர் சச்சிதானந்த ஜோசி வரவேற்றார். விழாவை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து உத்ராபதி குழுவினரின் மங்கள இசை, வேத பாராயணம் மற்றும் சுவாமிநாத ஓதுவார் குழுவினரின் தேவார இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் மாலை வரை பல்வேறு கருத்தாளர்கள் பங்கு பெறும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர் ரமணனின் கவியரங்கமும், பிரமிளா குருமூர்த்தியின் ஹரிக்கதா நிகழ்வும் நடைபெற்றது.
பரதநாட்டியம்
மாலை 6.30 மணிக்கு தஞ்சை தென்னகப்பண்பாட்டு மைய உள்அரங்கில் பத்மா சுப்ரமணியம் குழுவினரின் சங்கம் முதல் சதிர் வரை நாட்டிய நிகழ்வும், அதைத்தொடர்ந்து மும்பை குரு கல்யாணசுந்தரம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வும் நடைபெற்றது.
விழாவில் இந்திராகாந்தி தேசிய கலை மைய வதோதரா மண்டல இயக்குனர் அருப்பா லகிரி, புதுச்சேரி மண்டல இயக்குனர் கோபால், இந்திய தொல்லியல் துறை திருச்சி சரக இயக்குனர் அருண்ராஜ், தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ராஜகோபாலன், சரசுவதி மகால் நூலக முன்னாள் காப்பாளர் பெருமாள், திருவையாறு அரசு இசைக்கல்லூரி முன்னாள் முதல்வர் ராமகவுசல்யா மற்றும் தென்னகப்பண்பாட்டு மைய நண்பர்கள் குழு தலைவர் டாக்டர் வரதராஜன், செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிராமிய நடனம்
2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சி பட்டறை மற்றும் கிராமிய நடனம், தப்பாட்டம், வாய்ப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தென்னகப்பண்பாட்டு மைய திறந்தவெளி அரங்கில் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடைசி நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சி பட்டறை நாட்டிய நிகழ்வு, பரதநாட்டியம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
நிறைவு விழாவில் இந்திய தொல்லியல் துறை நிர்வாக இயக்குனர் வித்யாவதி மற்றும் பலர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்குகின்றனர்.
Related Tags :
Next Story