வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம்
விழுப்புரம் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்தலில் 935 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1,42,022 ஆண் வாக்காளர்களும், 1,51,109 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 55 பேரும் ஆக மொத்தம் 2,93,186 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தற்போது வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூத் சிலிப் வினியோகம்
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்ய அவை தயார் செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து நேற்று முன்தினம் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வார்டு, வாரியாக பூத் சிலிப் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை இன்று (ஞாயிற்றுக்கிழமைக்குள்) முடிக்க வேண்டுமென வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பூத் சிலிப் வாங்காமல் விடுபட்டவர்கள், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகே பூத் சிலிப் வினியோகம் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். விழுப்புரம் நகராட்சியில் பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணியை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story