மீனவர் கொலை வழக்கில் வாலிபர் கைது - கடற்கரையில் மது குடித்ததை தட்டி கேட்டதால் கொலை நடந்துள்ளதாக போலீசார் தகவல்


மீனவர் கொலை வழக்கில் வாலிபர் கைது - கடற்கரையில் மது குடித்ததை தட்டி கேட்டதால் கொலை நடந்துள்ளதாக போலீசார் தகவல்
x

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். கடற்கரையில் மது குடித்ததை தட்டி கேட்டதால் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் மணிமாறன் என்கிற அசோக்குமார் (வயது 26). மீனவர். இவர் மாமல்லபுரத்தில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்தார்.

இவர் கடந்த புதன்கிழமை கை, கால், தலை, வாய் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கடற்கரை மணலில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் சிலர் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அசோக்குமார் உடல் அருகில் கொலை செய்து தப்பி ஓடிய நபர்கள் குறித்த தடயங்கள் ஏதாவது உள்ளதா? என தடயவியல் துறை நிபுணர்களை வரவழைத்து தடயவியல் கருவி மூலம் ஆய்வு நடத்தினர். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்மாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவளத்தில் ஒரு ரகசிய இடத்தில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் அங்குள்ள ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்த வரை சுற்றி வளைத்தனர். அவர் அங்கிருந்த மதில் சுவரை தாண்டி தப்பி ஓட முயன்றபோது கால்தவறி விழுந்து காயம் அடைந்தார். பிறகு மாமல்லபுரம் போலீசார் ரத்த காயத்துடன் அவரை பிடித்து வந்து மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் விக்கி என்ற விக்னேஷ் (வயது21) ஆவார், இவர் சோழிங்கநல்லூர் ஜி.கே.மூப்பனார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

கொலைக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கூறியதாவது:-

கடந்த புதன்கிழமை இரவு விக்னேஷ் உள்ளிட்ட 7 பேர் மாமல்லபுரம் கடற்கரையில் மது குடித்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற அசோக்குமார் இங்கு திறந்த வெளியில் மது குடிக்க அனுமதியில்லை. எப்படி நீங்கள் இங்கு மதுகுடிக்கலாம் என்று தட்டி கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அதிக மது போதையில் இருந்த விக்னேஷ், அவரது நணபர்கள் உள்ளிட்ட 7 பேரும் ஆத்திரமடைந்து அசோக்குமாரின் கால், கை, முகம் போன்ற பகுதிகளில் கத்தியால் வெட்டி உள்ளனர்.

இதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதிபடுத்தி கொண்ட போதை கும்பல் அவரது முகத்தை மண்ணில் புதைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். தற்போது விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற 6 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களை தனிப்படை போலீசார் பல இடங்களிலும் தேடி வருகிறார்கள் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கூறினார்.

Next Story