மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
குண்டம் திருவிழா
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 14-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை ஆகியவை நடந்தன.
காலை 9.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், இரவு 6 மணிக்கு சித்திரதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனிபூஜை நடைபெறுகிறது. சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்
இந்த நிலையில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆனைமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி பகுதியில் இருந்து ஆனைமலை வழியாக வேட்டைக்காரன்புதூர் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஆனைமலை போலீஸ் நிலைய வீதி, பெரியபோது ரோடு வழியாக குப்பிச்சிபுதூர், ஒடையகுளம் சென்று, வேட்டைக்காரன்புதூரை அடைய வேண்டும்.
வேட்டைக்காரன்புதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்கள் மாசாணியம்மன் கோவில் திருமணம் மண்டபம் பின் உள்ள சாலை வழியாக செல்ல வேண்டும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் வி.ஆர்.டி. பெண்கள் பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இரு சக்கர வாகனங்கள் ஆனைமலை மத்திய பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
வாகனங்கள் நிறுத்துவதற்கு பொள்ளாச்சி ரோடு, நா.மூ.சுங்கம் மற்றும் வேட்டைக்காரன்புதூர் சாலைகளில் போதுமான இடவசதி செய்யப்பட்டு உள்ளதால் அவற்றை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களும், உள்ளூர் பொது மக்களும் பயன்படுத்தி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் குண்டம் திருவிழாவையொட்டி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குண்டம் திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story