பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா


பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 17 Feb 2022 4:43 PM IST (Updated: 17 Feb 2022 4:43 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 

பிளேக் மாரியம்மன் கோவில் 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் ஆர்.எஸ். ரோட்டில் பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு நடப்பட்டு இருந்த கம்பத்திற்க்கு மஞ்சல்நீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர்.நேற்று முன்தினம் காலை பிளேக்மாரியம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்குஎடுத்து நேர்ச்சை செலுத்தினார்கள். தொடர்ந்து பிளேக்மாரியம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு கோவில் முன்பு 62 அடி நீளம் கொண்ட குண்டம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 6 மணிக்கு குண்டத்திற்கு பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாமாங்கம் ஆற்றிலிருந்து பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

குண்டம் இறங்கிய பக்தர்கள்

நேற்று காலை செண்டை மேளம் முழங்க பிளேக்மாரியம்மன் சிங்க வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதிகாலை மாமாங்கம் ஆற்றிலிருந்து கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பிளேக் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.அதனை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்திற்க்கு திரவியபொருட்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
அதன் பின்னர் 50-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் "ஓம் சக்தி பராசக்தி தாயே"என்ற கோஷத்துடன்  பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார்கள். சில ஆண்கள் கையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து பிளேக்மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. குண்டம் திருவிழாவில் கிணத்துக்கடவு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செ.தாமோதரன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மஞ்சள் நீராடுதல்

கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். (இன்று) வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
வருகிற 19-ந் தேதி காலை 10 மணிக்கு பிளேக் மாரியம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம் பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story