தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 Feb 2022 8:44 PM IST (Updated: 17 Feb 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

கனரக வாகனங்களால் இடையூறு

கோத்தகிரி டானிங்டன் எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் இருந்து கோடநாடு செல்லும் சாலையோரத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் உள்பட ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் சாலையில் செல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதை தடுக்க வேண்டும். 
ராஜாமணி, கோத்தகிரி.

ஒளிராத தெருவிளக்குகள்

கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து கேர்பெட்டா ஹாயட்டி செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள தெரு விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் பயத்துடன் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான தெருவிளக்குகளை சரிசெய்து அவற்றை ஒளிர செய்ய வேண்டும். 
சுப்ரமணி, கேர்பெட்டா. 

சாலையின் நடுவே பொருட்கள் 

கோவை காந்தி மாநகர் போலீஸ் நிலையம் செல்லும் சாலையின் நடுவே லாரி டயர், டிரம்கள், மரக்கிளைகள், கற்கள் போடப்பட்டு உள்ளது. அவற்றை அங்கு எதற்காக போட்டு உள்ளனர் என்பது தெரியவில்லை. சாலையின் நடுவே இந்த பொருட்கள் கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து சாலையின் நடுவே கிடக்கும் இந்த பொருட்களை அகற்ற வேண்டும்.
கதிரவன், காந்திமாநகர். 

பராமரிக்கப்படாத கழிவறைகள்

பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் வால்பாறை செல்லும் பஸ்கள் நிற்கும் எதிர்புறம் கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகள் தினமும் முறையாக பராமரிக்காததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மூச்கைப் பிடித்துக்கொண்டு நிற்கும் அவல நிலை தொடர்கிறது. அத்துடன் தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த கழிப்பிடத்தை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கண்ணன், பொள்ளாச்சி.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
ஒளிராத விளக்கு சரிசெய்யப்பட்டது

கோவை சாய்பாபாகாலனி அழகேசன் சாலையில் 15 நாட்களாக மின்விளக்கு ஒளிராமல் இருந்தது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக  அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த மின்விளக்கை சரிசெய்து ஒளிர செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. 
செல்வராஜ், சாய்பாபாகாலனி. 

எரிந்த நிலையில் நிற்கும் மரம்

கோவைப்புதூர் கியூ பிளாக்கில் உள்ள 100 அடி சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரும் வகையில் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மரத்தை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடந்ததால், அதில் தீ பிடித்து பற்றி எரிந்தது. அந்த தீ அருகில் இருந்த மரத்துக்கும் பரவி மரம் முழுவதும் கருகியது. இதனால் அந்த மரம் எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும். அத்துடன் அங்கு பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க வேண்டும். 
நா.ஹரிஹரன், கோவைப்புதூர்.

அதிவேகமாக செல்லும் வாகனங்கள்

கிணத்துக்கடவில் இருந்து ஒழலபதி செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பாரங்கள் ஏற்றி அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், சாலையும் பழுதாகி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்து, இந்த வழியாக அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
மனோகர், கிணத்துக்கடவு. 

தெருநாய்கள் தொல்லை

கோவை மாநகராட்சி 81-வது வார்டுக்கு உட்பட்ட தாமஸ் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருக்களில் கூட்டங்கூட்டமாக வலம் வரும் நாய்கள் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள் தப்பி ஓடும்போது கீழே தவறி விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
கணேசன், தாமஸ்வீதி. 

போக்குவரத்து நெரிசல்

ஆனைமலை முக்கோணம் பகுதியில் வாகனங்கள் சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் இந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், அங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து முக்கோணம் பகுதியில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
மகேந்திரன், ஆனைமலை. 

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் இருந்து மோதிரா புரம் வழியாக மீன்கரை ரோடு செல்லும் வழியில் சாலையோரத்தில் இறைச்சிக்கழிவுகள் உள்பட ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்பவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலையும் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அங்க கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
மணிகண்டன், சூளேஸ்வரன்பட்டி. 


Next Story