‘தின்னர் டப்பா’ வெடித்து 2 தொழிலாளர்கள் படுகாயம்
சென்னை கிண்டியில் ‘தின்னர் டப்பா’ வெடித்து 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள இந்தியன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை வேளச்சேரி கேட் சாலை பகுதியில் நடந்த கட்டுமான பணியில் வேலையாட்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 20 லிட்டர் எடை கொண்ட ‘தின்னர் டப்பாவை’ காளி (வயது 20) மற்றும் மஞ்சுநாத் (33) என்ற 2 கட்டுமான தொழிலாளர்கள் கீழ் தளத்துக்கு இறக்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 லிட்டர் கொண்ட ‘தின்னர் டப்பா‘ கீழே விழுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறியது.
இதில் கட்டுமான தொழிலாளர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 2 பேரையும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் மஞ்சுநாத் அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். காளி, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட தின்னர், 3 மாதங்களுக்கு மேல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் வாயு கலந்து வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story