மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடியில் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் உள்ளன.
பொள்ளாச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடியில் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் உள்ளன.
இன்று வாக்குப்பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 89 வாக்குச்சாவடிகளும், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 22 வாக்குச்சாவடிகளும், ஜமீன்ஊத்துக்குளியில் 20 வாக்குச்சாவடிகளும், கோட்டூரில் 29 வாக்குச்சாவடிகளும், ஆனைமலையில் 20, ஒடையகுளத்தில் 17 வாக்குச்சாவடிகளும், வேட்டைக்காரன்புதூரில் 21 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நகராட்சியில் 151 பேரும், சூளேஸ்வரன்பட்டியில் 72 பேரும், ஜமீன்ஊத்துக்குளியில் 49 பேரும், ஆனைமலையில் 59 பேரும், கோட்டூரில் 104 பேரும், ஒடையகுளத்தில் 45, வேட்டைக்காரன்புதூரில் 57 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்ள் பெயருடன், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கு பலத்த துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் நேற்று அனுப்பும் பணி நடைபெற்றது. நகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமுர்த்தி தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அறையின் சீல் உடைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் வாக்களின் தேவையான அனைத்து ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
பொள்ளாச்சி நகராட்சியில் 107 வாக்குப்பதிவு எந்திரங்கள், 107 கட்டுப்பாட்டு எந்திரங்கள், சூளேஸ்வரன்பட்டியில் 27 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 27 கட்டுப்பாட்டு எந்திரங்களும், ஜமீன்ஊத்துக்குளியில் 24 வாக்குப்பதிவு எந்திரங்களும், 24 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்திற்குள் கூட்டமாக நிற்பதோ, வாக்காளர்களை வாக்களிக்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. இதை மீறுவேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்கள்.
வால்பாறை
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் 73 வாக்குச்சாவடிகளில் பணிபுரியக்கூடிய வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள், வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் உள்பட 358 பேருக்கு தேர்தல் பார்வையாளர் ஜமுனாதேவி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தேர்தல் பணிக்கான உத்தரவுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த 73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், குறிப்பாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கான உடல் வெப்ப பரிசோதனை கருவி, கிருமிநாசினி, வாக்காளர்கள் பயன்படுத்துவதற்கான கையுரை, கைகழுவும் திரவம், முகக்கவசம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி ஆகிய பொருட்கள் அடங்கிய வாக்குச்சாவடி பயன்பாட்டு பொருட்களை அந்தந்த மண்டல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
300 போலீசார் பாதுகாப்பு
வால்பாறை நகராட்சி தேர்தலை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில ்2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300 போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வனத்துறையின் சார்பில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனப் பணியாளர்கள் எஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story