குண்டர் சட்டத்தில் தொழிலாளி சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் தொழிலாளி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 9:02 PM IST (Updated: 18 Feb 2022 9:02 PM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட தொழிலாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் வடக்கு மாமல்லபுரம் பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சரவணன் என்கிற கராத்தே சரவணன் (வயது 40). சிற்ப கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகடம்பாடியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனையாளர் ஆனந்தன் என்பவரை மணல், ஜல்லி வேண்டும் என்று செல்போனில் பேசி வெண்புருஷம் என்ற இடத்திற்கு வரவழைத்து தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றார். பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு இடத்தில் ஆனந்தனின் மனைவியை வரவழைத்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சம், 1 பவுன் தங்க சங்கிலி போன்றவற்றை வாங்கி கொண்டு ஆனந்தனை விடுவித்து அங்கிருந்து 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர் போலீசார் மாமல்லபுரம் அருகே ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கராத்தே சரவணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து தொடர்ந்து கொலை முயற்சி, வழிப்பறி செய்தல், கொள்ளை அடித்தல், ஆள் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் கராத்தே சரவணன் ஈடுபட்டு வருவதாகவும், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் பரிந்துரை செய்தனர். அவர் மீது உள்ள குற்ற வழக்குகள் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தனர். போலீஸ் சூப்பிரண்டின் பரிந்துரையை ஏற்று கராத்தே சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Next Story