குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு வருகை
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்தது. அதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
வாலாஜாபாத்,
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தன. காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
மேலும் கலை பண்பாட்டுத்துறை, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை, மற்றும் பள்ளி் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கு கொண்ட நாட்டுப்பற்றை விளக்கக்கூடிய நாடகங்கள், மற்றும் இசை நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அலங்கார ஊர்தியில் இந்த சுதந்திர போராட்ட தியாகிகளான ராணி வேலுநாச்சியார், மகாகவி பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, சேலம் விஜய ராகவாச்சாரியார், தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடி காத்த திருப்பூர் குமரன், உள்ளிட்டோர் அடங்கிய சிலைகளை பார்வையிட்டு வரலாறுகளை கேட்டறிந்தனர்.
அலங்கார ஊர்தியின் அழகை கண்டு ரசித்த பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும், பொதுமக்களும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சேகர், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் மற்றும் பலர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story