478 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு இன்று தேர்தல்
திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேரூராட்சிகளில் மொத்தம் 478 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 61 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திண்டுக்கல்:
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளும், பழனி நகராட்சியில் 33 வார்டுகளும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகளும், கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகளும் உள்ளன.
அதேபோல் 23 பேரூராட்சிகளில் 363 வார்டுகள் இருக்கின்றன. இதன்மூலம் மொத்தம் 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 2 ஆயிரத்து 752 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 135 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் 548 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
478 பதவிகளுக்கு 2,061 பேர்
இதையடுத்து 2 ஆயிரத்து 69 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 2 வார்டு கவுன்சிலர்களும், கன்னிவாடி, கீரனூர், எரியோடு, சித்தையன்கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவரும், நிலக்கோட்டை பேரூராட்சியில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.
இதனால் மீதமுள்ள 478 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 61 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வரை சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.
வாக்காளர்கள்
இதை தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில்1 லட்சத்து 81 ஆயிரத்து 670 வாக்காளர்களும், கொடைக்கானல் நகராட்சியில் 29 ஆயிரத்து 383 வாக்காளர்களும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 28 ஆயிரத்து 68 வாக்காளர்களும், பழனி நகராட்சியில் 62 ஆயிரத்து 214 வாக்காளர்களும் இருக்கின்றனர்.
இதுதவிர 23 பேரூராட்சிகளிலும் மொத்தமாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 545 வாக்காளர்களும் உள்ளனர். இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 880 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.
737 வாக்குச்சாவடிகள்
இதையொட்டி திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச்சாவடிகள், 3 நகராட்சிகளில் 140 வாக்குச்சாவடிகள், 23 பேரூராட்சிகளில் 414 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதில் 189 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். அவை அனைத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் 91 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராவும், 98 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இதுதவிர 98 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் தேர்தல் பணியில் 3 ஆயிரத்து 612 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டு விட்டது. இதையடுத்து நேற்றே அந்தந்த வாக்குச்சாவடிக்கு அவர்கள் சென்று, வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
Related Tags :
Next Story