நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 19 Feb 2022 8:13 PM IST (Updated: 19 Feb 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுரை வழங்கினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நிறைவுற்ற நிலையில் இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தங்கள் வார்டு பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.

மேலும் வாக்குப்பதிவுக்கான போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட அண்ணா காவல் அரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போலீசார் நடுநிலையுடன் செயல்பட்டு போலீசாருக்கு நற்பெயரை பெற்று தர வேண்டும். சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று சிறப்புடன் பணியாற்ற வேண்டும்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள், 100 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1,056 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story