மாமல்லபுரத்தில் மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது


மாமல்லபுரத்தில் மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2022 8:41 PM IST (Updated: 19 Feb 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மீனவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் அசோக்குமார் (வயது 26). இவர் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வரும் மீனவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கை, கால், தலை, வாய் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கடற்கரை மணலில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அங்கு கடற்கரையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் 7 நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மாமல்லபுரம் கடற்கரையில் மது குடித்த இவர்களை தட்டிகேட்டபோது போதையில் இருந்த 7 பேரும் சேர்ந்து அசோக்குமாரை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கோவளத்தில் ஒரு ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த சோழிங்கநல்லூர் ஜி.கே.மூப்பனார் நகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவிடந்தையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் போலீசாரை பார்த்ததும் பயந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்தி சென்று சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த சாகுல்அமீது ( 24), பெரும்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் (21), புருஷோத்தமன் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் ஏற்கனவே வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ள தகவல் தனிப்படை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இவர்கள் 3 பேரும் மீனவர் அசோக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து, திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story