வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல்
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு, அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு, அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு
கோவையில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் மட்டுமே அதிகளவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதன்காரணமாக மாநகராட்சியில் 53.61 சதவீத வாக்குகள் பதிவாகின. 33 பேரூராட்சிகளில் 73.83 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 1,290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 1,290 கன்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் 1,308 பேலட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வார்டு வாரியாகவும், வரிசை எண் அடிப்படையில் அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டன.
10 அறைகளுக்கு சீல்
இதேபோல் 7 நகராட்சிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த நகராட்சி வாக்கு எண்ணும் மையங்களுக்கும், 33 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. சில மையங்களில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.
இந்த எந்திரங்கள் அனைத்தும் அதற்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்து பூட்டப்பட்டன. கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கோவிந்த ராவ், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட 10 அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
24 மணி நேரமும் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 1 போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு, 1 போலீஸ் உதவி கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 411 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும். வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் அங்குள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் வாக்கு எண்ணும் மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story