வார்டு வாரியாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி பேட்டி
கோவை மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுவதுடன், தேர்தல் முடிவுகளை காலதாமதம் இன்றி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.
கோவை
கோவை மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுவதுடன், தேர்தல் முடிவுகளை காலதாமதம் இன்றி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் நேற்று கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பு பார்வையாளர் நாகராஜன், கலெக்டர் சமீரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரத்தின் போதும், வாக்குப்பதிவு நாளன்றும் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து பிற கட்சியினர் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இதையடுத்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக நாகராஜன் நியமிக்கப்பட்டார்.
கூடுதல் பாதுகாப்பு
இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க.விற்கு ஆதரவாக அதிகாரிகள் நடந்து கொள்ள வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. ஐகோர்ட்டு உத்தரவின்படி வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து மையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
உடனுக்குடன் முடிவுகளை வெளியிட வேண்டும்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையற்ற சட்ட சிக்கல்களை உருவாக்குவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர். மேலும் தி.மு.க.வினர் தங்கள் வேட்பாளர்களை பண பலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற வைக்க தயாராக உள்ளனர்.
எனவே மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள் வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை எவ்வித காலதாமதமின்றி அறிவிப்பதுடன், வெற்றி சான்றிதழையும் உடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story