கத்தியால் கழுத்தை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
வடமதுரையில், கத்தியால் கழுத்தை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
மருத்துவ கல்லூரி மாணவி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் பால்ராஜ். கேபிள் டி.வி. ஆபரேட்டர். அவருடைய மனைவி அகிலா. இந்த தம்பதிக்கு நிவேதா (வயது 22) என்ற மகளும், சபரி (17) என்ற மகனும் உள்ளனர்.
நிவேதா, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தார். சபரி, வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா விடுப்பில் வடமதுரைக்கு வந்தார்.
கத்தியால் கழுத்து அறுப்பு
இந்த நிலையில் நேற்று மாலை பால்ராஜ், அகிலா ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் நிவேதாவும், சபரியும் மட்டும் இருந்தனர். அப்போது குளியலறைக்குள் நிவேதா சென்றார்.
பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்தார். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு, சபரி ஓடி வந்து பார்த்தார்.கழுத்தை அறுத்த நிலையில், ரத்த வெள்ளத்தில் நிவேதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு சபரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது பெற்றோருக்கு சபரி தகவல் தெரிவித்தார்.
பரிதாப சாவு
இதனையடுத்து பதறி அடித்து கொண்டு அவரது பெற்றோர், வீட்டுக்கு ஓடோடி வந்தனர். பின்னர் நிவேதாவை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் விரைந்து சென்று, நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிவேதா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story