காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 5:39 AM IST (Updated: 21 Feb 2022 5:39 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில், காஞ்சீபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு ஆகிய 2 நகராட்சிகள், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய 3 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 155 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 384 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 66.82 சதவீத வாக்குகள் பதிவானது.

காஞ்சீபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் காஞ்சீபுரம் காரப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளில் பதிவான வாக்குகள் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்து வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியே போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Next Story