தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 21 Feb 2022 7:54 PM IST (Updated: 21 Feb 2022 7:54 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த பொதுமக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த பொதுமக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 


பழுதடைந்த இருக்கை 

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் அமர மரத்தினால் ஆன இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. அந்த இருக்கைகள் உடைந்து ஓட்டை விழுந்து காணப்படுவதால், அதில் பொதுமக்கள் அமரும்போது, உடைகள் கிழிந்து காயம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு பழுதடைந்த இருக்கையை சரிசெய்ய வேண்டும். 
சிவராஜ், கோத்தகிரி.

சுகாதாரமான குடிநீர் வேண்டும்

கோத்தகிரி காம்பாய்கடை மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சேறும் சகதியும் கலந்து வருகிறது. குறிப்பாக மாரியப்பன் லைனில் இருந்து மிஷன் காம்பவுன்ட் இடையே சிற்றோடை மூலம் தண்ணீர் வருவதால் அதில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கோத்தகிரி பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 
ராஜேந்திரன், கோத்தகிரி. 

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

கோவை நியூ சித்தாபுதூர் பகுதியில் உள்ள சின்னச்சாமி சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும். இந்த சாலையில் உள்ள மின் மயானம் அருகில் குப்பை கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இங்கு குப்பை தொட்டி இல்லாததால் அங்கு போடப்படும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது, அந்த குப்பைகள் காற்றில் பறந்து அந்த வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன் அங்கு குப்பை தொட்டியும் வைக்க வேண்டும்.
துரை, கோவை.

புதர்மண்டி கிடக்கும் சாலை

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் இருந்து காரக்கொல்லி வழியாக கையுன்னி செல்லும் சாலையில் இருபுறமும் முற்புதர்கள் சூழ்ந்து உள்ளது. இதனால் வளைவுகளில் வாகனங்கள் தெரியாத வகையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதர்மண்டி கிடக்கும் இந்த சாலையை சுத்தம் செய்ய வேண்டும். 
செல்வம், கையுன்னி.

தூர்வாரப்படாத தடுப்பணை

கோத்தகிரி அருகே கூக்கல்தொரைப் பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை தூர்வாரப்படாததால் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளதுடன், சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இங்கு தேங்கும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் மழை அதிகமாக பெய்யும்போது விரைவில் தடுப்பணை நிரம்பி விடுவதால், தண்ணீர் வீணாக வெளியேறி செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த தடுப்பணையை உடனே தூர்வார வேண்டும்.
மகேந்திரன், கூக்கல் தொரை.

வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் செல்லும் ரோடு பிரிவில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் சில நேரத்தில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அத்துடன் குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். 
குமரன், பொள்ளாச்சி.

குரங்குகள் அட்டகாசம் 

கோவை சேரன் மாநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இந்த குரங்குகள் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. வீடுகளின் மேல் ஓடும் குரங்குகள் தனியாக நடந்து செல்லும் குழந்தையின் கையில் இருந்து பொருட்களை பறித்து செல்கிறது. அத்துடன் வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களையும் தூக்கிச்சென்று விடுகிறது. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரிக்கு முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இங்கு வந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்களில் வரும் நோயாளிகள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நம்பியழகன், மீனாட்சிபுரம். 

சுகாதார சீர்கேடு

பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினத்தில் சாலை ஓரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், அந்த குப்பைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி. 

தெருநாய்கள் தொல்லை

கோவை 53-வது வார்டு தாமஸ் வீதியில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. கூட்டங்கூட்டமாக சுற்றும் தெருநாய்கள் இரவு நேரத்தில் சத்தமாக ஊளையிடுகிறது. அத்துடன் தனியாக நடந்து செல்பவர்களை துரத்துகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
கணேசன், கோவை. 


Next Story