இருமொழி கொள்கையை கடைபிடிப்பவர், மு.க.ஸ்டாலின்


இருமொழி கொள்கையை கடைபிடிப்பவர், மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Feb 2022 1:23 AM IST (Updated: 22 Feb 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

இருமொழி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார் என திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்:
இருமொழி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார் என திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
உலக தாய்மொழி நாள் விழா
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி நாள் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். இலக்கியத்துறை தலைவர் இளையாபிள்ளை வரவேற்றார். விழாவில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்சகட்ட போராட்டம்
இந்தி மொழி நமக்கு எதிரி அல்ல. நம்மை ஆதிக்கம் செலுத்த வருகிற மொழி இந்தி என்ற காரணத்தினால் அதை எதிர்த்து வருகிறோம். இந்திக்கு எதிராக தொடர்ந்து பல முறை போராட்டம் நடைபெற்றது. 
இந்த போராட்டம் 1965-ம் ஆண்டில் உச்சகட்டத்தை அடைந்தது. நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, நம்முடைய ஆட்சி மொழி ஆங்கிலமாகத்தான் இருந்தது.
இந்திக்கு எதிராக குரல்
ஆனால், அரசியல் சட்டத்தில் இனிமேல் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு தலைவர்கள் மட்டுமே. இந்த பிரச்சினையை பஞ்சாபி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி பேசுபவர்கள் பொருட்படுத்தாமல் இருந்தனர். 
அந்த நேரத்தில் ஆங்கிலத்தை அகற்றினால், இந்தி மட்டுமே எல்லாவற்றையும் விழுங்கிவிடும் என்பதை எச்சரித்த மண் தமிழ்நாடுதான்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதன் விளைவாக 1962-ம் ஆண்டில் ஆட்சி மொழி திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்ணாவின் முயற்சியால் ஆங்கிலம் இணைப்பு ஆட்சி மொழியாக தொடர்கிறது. இந்த இரு மொழி கொள்கையை நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக கடைப்பிடித்து வருகிறார்.
வங்காளதேசத்தில் தாய்மொழியான வங்காள மொழிக்காக கிளர்ச்சி ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் 1952-ம் ஆண்டில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஐ.நா. சபைக்கு எடுத்து செல்லப்பட்டதையடுத்து 1999-ம் ஆண்டில் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ந் தேதி உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கடைப்பிடிக்கப்படும் என யுனெஸ்கோ மூலம் அறிவிக்கப்பட்டது.
தாய்மொழி தமிழ்
உலக அளவில் கிரேக்க மொழி அழிந்து விட்டது. விவிலியம் எழுதப்பட்ட ஹீப்ரு மொழி, இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மாண்டலின் என்கிற சீன மொழி மெல்ல, மெல்ல சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. இதேபோல, சமஸ்கிருதம் மக்கள் மொழியாக மாறவில்லை.
ஆனால் மக்களுக்காகவும், இறைவனுக்காகவும், இலக்கியத்துக்காகவும், தொழில்நுட்பத்துக்கு ஏற்றதாகவும், காலங்களை வென்றதாகவும் இருப்பது நம் தாய்மொழி தமிழ் மட்டுமே. நம் மொழியை காப்பதற்கு தங்களது உயிரை ஏராளமானோர் தானமாக கொடுத்தனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி நினைவுகூர்ந்து, வீரவணக்கம் செலுத்தி போற்றுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம், பதிவாளர்(பொறுப்பு) நீலகண்டன், மொழிப்புல முதன்மையர் காமராசு ஆகியோர் பேசினர். முடிவில் மொழியியல் துறை உதவி பேராசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.

Next Story