பெசன்ட் நகர், பழைய வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு


பெசன்ட் நகர், பழைய வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 Feb 2022 5:56 AM IST (Updated: 22 Feb 2022 5:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் பெசன்ட் நகரில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

சென்னை,

திருவான்மியூர், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில் அருகில் உள்ள ஓடைக்குப்பம் 179-வது வார்டில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் 5059-வது எண் கொண்ட வாக்குச்சாவடியில், கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது. பகல் 3 மணி அளவில் சிலர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து, சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த வாக்குச்சாவடியில் நேற்று மறுவாக்குப்பதிவை நடத்தியது. 660 ஆண் வாக்காளர்களும், 666 பெண் வாக்காளர்கள் உட்பட 1,326 வாக்காளர்களை கொண்ட இந்த வாக்குச்சாவடியில் நேற்று காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஓட்டு போட்டனர். ஏற்கனவே இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்ததால், மறு வாக்குப்பதிவு நேற்று நடந்த போது வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

மாலை 6 மணிக்கு 628 ஓட்டுகள் பதிவான நிலையில் ஓட்டுப்பதிவு நிறைவு செய்யப்பட்டது. வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சீல் வைத்து ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அசம்பாவிதம் மேலும் நடக்காமல் இருப்பதற்காக வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நடந்ததால் நேற்று இந்தப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கள்ள ஓட்டு புகார்

கள்ள ஓட்டு முறைகேடு தொடர்பான புகாரின் காரணமாக சென்னை மாநகராட்சியின் 51-வது வார்டுக்கு உட்பட 1,174 எண்ணுடைய வாக்கு சாவடியில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை சாலையில் உள்ள சென்னை உருது தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வந்த இந்த வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே தொடங்கியது. காலை 7 மணி முதல் 8 மணி வரையிலான ஒரு மணி நேர காலத்தில் 10 நபர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

281 பேர் மட்டுமே...

மாலை 5 மணிக்கு மேல் 6 மணி வரையிலான கொரோனா நோயாளிகள் வாக்களிக்கும் நேரத்தில் அந்தப் பகுதியில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாததால் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. மொத்தத்தில் இந்த வாக்குச்சாவடியில் நேற்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மொத்தம் 281 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

இதே வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற தேர்தலின்போது 423 பேர் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுவாக்குப்பதிவின்போது மீண்டும் கள்ளஓட்டு முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக நேற்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story