தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள்: தோட்டக்கலைத்துறை
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள் என்று செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சாந்தா செலீன் மேரி தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீட்டு திட்டம்
செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சாந்தா செலீன் மேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எதிர்பாராத அதிகப்படியான மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நஷ்டத்தை சரி செய்வதற்கும் அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதம காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டு ரபி பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் 28-ந் தேதிக்குள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் வட்டாரம் பாலூர் பிர்க்காவில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு காப்பீட்டு பிரிமிய தொகையாக ரூ.7,462, கத்தரி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 28,211-ஆக செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும். மேலும் வாழை, கத்தரி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த மாதம் 28-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் உடனடியாக பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகி இந்த திட்டத்தில் காப்பீடு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story