சொகுசு பஸ்சில் கடத்திய 553 கிலோ குட்கா பறிமுதல்


சொகுசு பஸ்சில் கடத்திய 553 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 24 Feb 2022 7:29 PM IST (Updated: 24 Feb 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

கருமத்தம்பட்டி அருகே சொகுசு பஸ்சில் 553 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே சொகுசு பஸ்சில் 553 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

ரகசிய தகவல்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச் சாவடியில் தனியார் சொகுசு பஸ்சில் இருந்து சில மூட்டைகளை பயணிகள் சிலர் வேனில் ஏற்றுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அவரின் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன், தனிப்பிரிவு தலைமை காவலர் ஞான வேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களை பார்த்த தும் வேனில் இருந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.  

553 கிலோ குட்கா பறிமுதல்

இதைத்தொடர்ந்து அந்த சொகுசு பஸ் மற்றும் வேனை போலீசார் சோதனையிட்டனர். அப்போது பஸ்சின் சீட்டுக்கு அடியில் சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
அதை பிரித்து பார்த்த போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13 வகையான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
இது தொடர்பாக அந்த சொகுசு பஸ்சின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சொகுசு பஸ்சை ஓட்டி வந்தது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 36), மற்றொரு டிரைவர் மதுரையை சேர்ந்த செல்வம் (38) என்பதும், ஒடிசாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து அந்த பஸ் டிரைவர்கள் முருகன், செல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பஸ்சில் கடத்தி வரப்பட்ட 553 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 
வேனில் இருந்து தப்பி ஓடியது கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்த இம்ரான்கான் உள்பட 2 பேர் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story