உக்ரைனில் சிக்கி தவிக்கும் 3 மாணவர்களை மீட்கக்கோரி தேனி கலெக்டரிடம் பெற்றோர் மனு


உக்ரைனில் சிக்கி தவிக்கும் 3 மாணவர்களை மீட்கக்கோரி தேனி கலெக்டரிடம் பெற்றோர் மனு
x
தினத்தந்தி 25 Feb 2022 9:45 PM IST (Updated: 25 Feb 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் மேலும் 3 மாணவர்களை மீட்கக்கோரி அவர்களது பெற்றோர் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தேனி:
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் மேலும் 3 மாணவர்களை மீட்கக்கோரி அவர்களது பெற்றோர் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேலும் 3 மாணவர்கள்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த மருதுபாண்டியன் மகன் ராஜேஷ்பாண்டியன் (வயது 21), அயூப்கான் மகன் ஷேக் முகமது (22), சீலையம்பட்டியை சேர்ந்த வீரமணி மகன் கோபிநாத் (22) ஆகியோர் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு மாணவ-மாணவிகள் பாதாள அறைகளில் அச்சத்துடன் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் ராஜேஷ்பாண்டியன் உள்பட 3 மாணவர்களின் பெற்றோர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்களின் பிள்ளைகளை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கலெக்டர் பேட்டி
மனுவை கொடுத்தபின்பு மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "உக்ரைனில் போர் தொடங்க வாய்ப்பு இல்லை என்று பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன. அதை நம்பி மாணவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். திடீரென்று போர் தொடங்கி விட்டதால் சொந்த ஊருக்கு வர முடியாமல் எங்கள் பிள்ளைகள் போன்று ஆயிரக்கணக்கானோர் உக்ரைனில் தவித்து வருகின்றனர். அடிக்கடி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாக எங்களின் குழந்தைகள் கூறுகிறார்கள். அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்களை பிரதமரும், முதல்-அமைச்சரும் பத்திரமாக மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஏற்கனவே ஒரு மாணவனின் பெற்றோர் மனு கொடுத்தனர். அந்த மனு உடனடியாக அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மேலும் 3 மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுக்களும் உடனடியாக தமிழக அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். உக்ரைனில் உள்ள மாணவர்களை பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான ஒரு எண்ணும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது என்னிடமும் தெரிவிக்கலாம்" என்றார்.

Next Story