உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கரூர்
உக்ரைன் மீது ரஷியா போர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் நேற்று 2-வது நாளாகவும் நீடித்தது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்று தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 3 பெற்றோர்கள் மனு அளித்தனர். இதில் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, திம்மாச்சிபுரம், மேலத்தெருவை சேர்ந்த சின்னதுரை-சுதா தம்பதியர் கொடுத்த மனுவில், எங்களது மகன் சூர்யா உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் ஏவியேசன் இன்ஸ்டிடியூட்டில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
உடனடியாக நடவடிக்கை
இந்நிலையில் இப்போது ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள சூழலில் எனது மகன் படித்து வரும் கார்கிவ் நகரம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், எனது மகன் பாதுகாப்பாக நாடு திரும்ப அரசு மூலம் உதவி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் கூறுகையில், கார்கிவ்வில் நேற்று முதல் (அதாவது நேற்றுமுன்தினம்) போர் பதற்றத்தின் காரணமாக பங்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். நேற்று ஒரு நேரம் மட்டும் தான் பிரட் சாப்பிட்டதாகவும், கடந்த 2 நாட்களாக தூக்கமின்றியும் உள்ளனர். மேலும் அவர்கள் அறைகளை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களது மகனை மீட்டுதர வேண்டும், என்றனர்.
15 பேர்
அதேபோல் கரூர் மாவட்டம், காந்திகிராமம் தெற்கு, இந்திராகாந்தி நகரை சேர்ந்த தங்கவேல் என்பவர் கொடுத்த மனுவில், எனது மகன் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிப்பதற்காக சென்றுள்ளார்.
இப்போது உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக எனது மகன் தரண் மற்றும் 15 பேர் அங்கு சிக்கி உள்ளார்கள். எனவே அனைவரையும் இந்தியா அழைத்து வர உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை
இதேபோல் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், அருணாச்சலம் நகர், 6-வது கிராசில் வசித்து வரும் ஆண்டனி கேப்ரியல்- கார்த்திகாயினி தம்பதியினரும் தனது மகளை மீட்டுத்தர கோரி மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், எங்களது மகள் ஸ்ரீநிதி. உக்ரைன் டெனிபரில் மருத்துவ படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது போர் சூழல் காரணமாக எங்களது மகளை மீட்டுத்தரக்கோரி மனு அளிக்க வந்தோம். எங்களது மகளுடன் சேர்ந்து 25 தமிழக மாணவர்கள் அங்கு உள்ளனர். அவர்களை உரிய நேரத்தில் மீட்டு தரக்கோரி கலெக்டர், தமிழக முதல்-அமைச்சர், பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறோம். நேற்று (அதாவது நேற்றுமுன்தினம்) அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எங்களது மகளுடன் போனில் பேசினோம். அப்போது எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்தது.
எங்களுக்கு பதற்றமாக...
ஆனால் 144 தடை அங்கு விதிக்கப்பட்டுள்ளது. அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது என கூறியுள்ளார்கள். இன்று (அதாவது நேற்று) கார்கிவ் இடத்தில் போரின் காரணமாக பிள்ளைகளை சப்வே-க்கு கொண்டு சென்றுள்ளனர். டெனிபரில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கும், இணையதளம் துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எனது மகள் ஸ்ரீநிதி கூறினார். நேற்றை விட இன்று போர் தீவிரமாகி இருக்கிறது. இதனால் எங்களுக்கு பதற்றமாக இருக்கிறது. அதனால் எங்களது மகள் இந்தியா வரவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story