கோவில்களின் பாரம்பரிய பெருமைகளை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது-மதுரை ஐகோர்ட்டு கருத்து


கோவில்களின் பாரம்பரிய பெருமைகளை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது-மதுரை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 26 Feb 2022 1:14 AM IST (Updated: 26 Feb 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களின் பாரம்பரிய பெருமைகளை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை, 

கோவில்களின் பாரம்பரிய பெருமைகளை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

முகநூல் கருத்து

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச்சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் கடந்த 1.10.2019 அன்று ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் என் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில், ஸ்ரீரங்கம் கோவிலில் முறைகேடு நடப்பதாக நான் எனது முகநூல் மூலம் பிரசாரம் செய்து வருவதாகவும், மத உணர்வை புண்படுத்தும் விதமான கருத்துகளை பரப்பி வருவதாகவும் அந்த புகாரில் என் மீது குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பெருமைகளை மீட்பது அவசியம்

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தமிழகம் கோவில்கள் நிறைந்த மாநிலம். நமது கலாசாரத்தில் கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனாலும் கோவில்களின் தற்போதைய நிலை மோசமாக உள்ளது. பழமையான கோவில்களின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள் தனியார்களால் அபகரிக்கப்பட்டு உள்ளன.
கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. கோவில் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோவில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் கிடக்கின்றன. இந்த கோவில்களில் உரிய பூஜைகள் கூட நடப்பதில்லை. 
கோவில்களின் பாரம்பரிய பெருமைகளை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. கோவில்களை யார் நிர்வகிப்பது என்ற ஒரு அடிப்படை பிரச்சினையும் உள்ளது. இதற்கிடையே, அனைத்து மத அமைப்புகளையும் அரசு, சமமாக நடத்தாதபோது, கோவில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இந்த வழக்கு விசாரணையின்போது எழுப்பப்பட்டது. இதுபோல ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மனுதாரர் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளும் நியாயமானவைதான். அதேவேளையில், சில சமயங்களில் மனுதாரர் நடந்துகொண்டிருக்கும் விதம் கோவில் நிர்வாகத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குவாதம், விவாதம் எப்போதும் உயர்வான நிலையில் இருக்க வேண்டும். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை. எனவே மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story