திருக்குறுங்குடி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் சுயேச்சை கவுன்சிலர் கடத்தலா? போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
பெண் சுயேச்சை கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
ஏர்வாடி:
திருக்குறுங்குடி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் சுயேச்சை கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சுயேச்சைகளை இழுக்க முயற்சி
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.
இந்த பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை பெற வேண்டுமானால் 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. இதனால் பேரூராட்சியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இருகட்சியினரும் சுயேச்சை கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் இந்த பேரூராட்சியில் 14-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அபியா (வயது 27) என்பவரையும், அவரது கணவர் தேவசிகாமணியையும் அ.தி.மு.க.வினர் கூலிப்படையினர் மூலம் கடத்தி சென்று விட்டதாக கூறி அவரது உறவினர் ரவி திருக்குறுங்குடி போலீசில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கவுன்சிலர் அபியாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு வந்து திருக்குறுங்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகருணாநிதி, களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல், திருக்குறுங்குடி நகர செயலாளர் கசமுத்து, இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டி உள்ளிட்ட தி.மு.க.வினரும் அங்கு குவிந்தனர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம், அபியாவை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அபியா மற்றும் அவரது கணவரை மீட்டுத்தராத பட்சத்தில் அடுத்தகட்டமாக சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
திருக்குறுங்குடி பேரூராட்சியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பெண் சுயேச்சை கவுன்சிலர் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story