பவானிசாகர் அருகே சரியான நேரத்தில் பஸ்சை இயக்க கோரி பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே சரியான நேரத்தில் பஸ்சை இயக்க கோரி பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே சரியான நேரத்தில் பஸ்சை இயக்க கோரி பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரியான நேரத்தில்...
பவானிசாகர் அருகே உள்ள கிராமம் புதுப்பீர்கடவு. இந்த கிராமத்தில் இருந்து தினமும் மாணவ- மாணவிகள் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு பள்ளிக்கூடத்துக்கு சென்று படித்து வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள், அரசு பஸ்சில் சென்று வருகிறார்கள்.
ஆனால் இந்த கிராமத்தின் வழியாக செல்லும் அரசு பஸ்கள் சரியான நேரத்தில் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
சாலை மறியல்
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று பகல் 11 மணி அளவில் புதுப்பீர்கடவு கிராமத்தில் இருந்து பண்ணாரி செல்லும் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா, சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் செல்ல சரியான நேரத்தில் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘புதுப்பீர்கடவு கிராமத்தில் இருந்து தொட்டம்பாளையம் பள்ளிக்கூடத்துக்கு செல்ல சரியான நேரத்தில் பஸ்சை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 20 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story