திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் 9 கி.மீ. தூரத்தை 3 மணி நேரம் கடந்த வாகனங்கள்; பொதுமக்கள் அவதி


திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் 9 கி.மீ. தூரத்தை 3 மணி நேரம் கடந்த வாகனங்கள்; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 26 Feb 2022 2:35 AM IST (Updated: 26 Feb 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 9 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் கடந்த வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 9 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் கடந்த வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது.
அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  
போக்குவரத்து நெரிசல்
காலை 6 மணி முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவதால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 
வழக்கம்போல் நேற்றும் காலை 6 மணி அளவில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஆனால் ஒரு வாகனத்தை ஒரு வாகனம் முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று காலை 8 மணிக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
அவதி
இதனால் திம்பம் மலைப்பாதையில் 9 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வாகனங்கள் 3 மணி நேரம் எடுத்துக்கொண்டன. தொடர்ந்து நடைபெறும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story