பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ‘திடீர்’ சாலைமறியல்
ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நேற்று பாளையங்கோட்டையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நெல்லை:
நிலுவை தொகை ரூ.1,600 கோடி வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நேற்று பாளையங்கோட்டையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வு பெற்ற ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள நெல்லை அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றோருக்கு பஞ்சப்படி, நிலுவை தொகை ரூ.1,600 கோடியை வழங்க வேண்டும். 2015-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். மருத்துவ படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சாலைமறியல்
போராட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் சிவதாணுதாஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார். மாநில துணை தலைவர்கள் பால்ராஜ், முத்துகிருஷ்ணன், வெங்கடாசலம், செயலாளர் சுந்தர்ராஜன், பழனி, சின்னான்பிள்ளை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது ஊழியர்கள் அங்குள்ள 4 வழிச்சாலைக்கு சென்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ரோட்டில் அமர்ந்தும், சிலர் படுத்துக் கொண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு நீண்ட நேரம் போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story