கோடை விழாவுக்கு தயாராகும் ஏற்காடு
ஏற்காடு கோடை விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஏற்காடு,
கோடை விழா
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மே மாத இறுதியில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். மலர் கண்காட்சியின் போது தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பி உள்ள உள்ளூர் மக்கள், தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
முதற்கட்ட பணிகள்
தற்போது கொரோனா ெதாற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஏற்காட்டில் கோடை விழா நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. அதாவது ஏற்காடு அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பண்ணை ஆகிய இடங்களில் மலர் செடிகளின் விதைகள் விதைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்படலாம் என தெரிகிறது.
3 லட்சம் விதைகள்
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படலாம். இதையொட்டி சுமார் 40-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களில் 3 லட்சம் விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் மே மாதத்தில் பூக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story