பெங்களூரு மாநகராட்சி அலுவலகம் உள்பட 27 இடங்களில் சோதனை
ஊழல், முறைகேடு புகார் எதிரொலியாக பெங்களூரு மாநகராட்சி அலுவலகம் உள்பட 27 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.
பெங்களூரு:
மாநகராட்சியில் முறைகேடு
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு (2021) ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இந்த முறைகேட்டில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் போலீசாரிடம் சிக்கி இருந்தனர்.
இதுபோல், பெங்களூரு மாநகராட்சியிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், வளர்ச்சி பணிகளில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
ஊழல் தடுப்பு படை சோதனை
இதையடுத்து, பெங்களூரு மாநகராட்சி அலுவலகம், சிறப்பு கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் அலுவலகம் என நேற்று ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பெங்களூரு மாநகராட்சியில் உள்ள நிதித்துறை சிறப்பு கமிஷனரான துளசி மத்தினேனி, வருவாய்த்துறை அலுவலகம், மாநகராட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் என 27 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதாவது பெங்களூரு நகரில் 11 பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 27 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனையை நடத்தினர்.
ஆவணங்கள் பரிசீலனை
சோதனை நடத்தப்பட்ட மாநகராட்சி அலுவலகங்களில் இருந்த முக்கிய ஆவணங்களை ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஊழல் தடுப்பு படை போலீசாரின் சோதனையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிரான ஆவணங்கள், சாட்சிகள் சிக்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story