சந்தன மரங்களை வெட்டி கடத்திய 5 பேர் கைது
சந்தன மரங்களை வெட்டி கடத்திய 5 பேர் கைது
பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பிரிவு மஞ்சள்போர்டுபள்ளம் என்கிற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து இரண்டு சந்தன மரங்களை வெட்டி துண்டுகளாக்கி தலைச்சுமையாக காண்டூர் கால்வாய் பகுதிக்கு கொண்டு வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான குழுவினர் சர்க்கார்பதி பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது ஒரு கார் காண்டூர் கால்வாய் பகுதிக்கு காரில் 2 பேர் வந்து நின்றனர். மேலும் 3 பேர் சந்தன மரத்துண்டுகளை சுமந்து வந்து காரில் ஏற்ற முயற்சி செய்தனர். இதையடுத்து அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து ஆனைமலையில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ், மன்னார்காடு முகமது பசீர், திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன், சக்கரவர்த்தி, அன்பழகன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் சர்க்கார்பதி பகுதிக்கு கட்டிட வேலைக்கு வரும் போது அங்கிருந்து சுமார் 73 கிலோ மீட்டர் தூரத்தில் டாப்சிலிப் பிரிவு பகுதியில் சந்தன மரங்கள் இருப்பதை பார்த்து உள்ளனர். இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்று சந்தன மரங்களை வெட்டி கொண்டு வந்து காரில் கடத்தி செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து வனத்துறையினர் காருடன், சுமார் 73 கிலோ கொண்ட 39 சந்தன மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையில் சந்தன மர கடத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அப்துல் சலீம் என்பவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story