ஆவின் பாலகம் தீப்பற்றி எரிந்தது


ஆவின் பாலகம் தீப்பற்றி எரிந்தது
x
தினத்தந்தி 26 Feb 2022 8:01 PM IST (Updated: 26 Feb 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ஆவின் பாலகம் தீப்பற்றி எரிந்தது. மேலும் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி

கோத்தகிரியில் ஆவின் பாலகம் தீப்பற்றி எரிந்தது. மேலும் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆவின் பாலகத்தில் தீ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள காமராஜர் சதுக்கம் பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை பெந்தட்டி கிராமத்தை சேர்ந்த நஞ்சுண்டன்(வயது 50) நடத்தி வந்தார். இவர் நேற்று  இரவில் வழக்கம்போல் வேலை முடிந்ததும், ஆவின் பாலகத்தை மூடிவிட்டு தனது வீட்டுக்கு சென்றார்.பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென அந்த ஆவின் பாலகம் தீப்பற்றி எரிந்தது. இதை அந்த வழியாக ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

சிலிண்டர் வெடித்தது

உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீ மள மளவென கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

அதற்குள் ஆவின் பாலகத்துக்குள் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களில், ஒரு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. மேலும் சுமார் 30 அடி தொலைவில் உள்ள பிற கடைகளின் மீது விழுந்தது. இது தவிர அருகில் இரந்த கடைகளின் பெயர் பலகைகளிலும் தீ பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காரணம் என்ன?

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. 

பஸ் நிறுத்தத்துக்கு அருகில் உள்ள ஆவின் பாலகம் என்பதால், பகல் நேரத்தில் இல்லாமல் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story