‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 26 Feb 2022 8:13 PM IST (Updated: 26 Feb 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாடிபோன செயற்கை நீரூற்று

கோவை சேரன் மாநகரில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று தண்ணீர் இன்றி வாடி போய் காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே நீர் ஊற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

வேலன், சேரன்மாநகர்.

சாலையில் பள்ளங்கள்

கோவை சிங்காநல்லூரில் இருந்து ஒண்டிப்புதூர் சோதனைச்சாவடி வரை சாலை உடைந்து கிடக்கிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே பள்ளம் காணப்படுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

சக்தி, சிங்காநல்லூர். 

பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்

அரசு போக்குவரத்துக்கழக ஒண்டிப்புதூர் கிளை சார்பில் என்.ஜி.ஜி.ஓ. காலனி, கஸ்தூரிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, சேரன்காலனி, பூச்சியூர், தீப்பனூர், கே.என்.ஜி.புதூர், கதிர்நாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளகிணறு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பஸ்களை நம்பி இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மீண்டும் அந்த பஸ்களை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரசாந்த், என்.ஜி.ஜி.ஓ. காலனி.

வாகன ஓட்டிகள் பாதிப்பு

பொள்ளாச்சி ராஜாமில் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் வெங்காய மார்க்கெட், பழ விற்பனை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், பொருட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மழை காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடப்பதால், அனைத்து தரப்பினரையும் அவதி அடைய செய்கிறது. இந்த பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.

கோகுலன், பொள்ளாச்சி.

வேகத்தடை அமைக்கப்படுமா?

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்து உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் தற்போது சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளதால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் நோயாளிகள் சில நேரங்களில் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அரசு ஆஸ்பத்திரி முன், உடுமலை ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திலக், ஆனைமலை.

விஷஜந்துகள் புகலிடம்

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தின் பின்புறம் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பழைய போலீஸ் குடியிருப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் கட்டிடம் இடித்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரைக்கும் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துகள் புகலிடமாக மாறி உள்ளது. மேலும் பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே புதர்செடிகளை அகற்றிவிட்டு போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, பொள்ளாச்சி.

குண்டும், குழியுமான சாலை

கோவை காந்திபார்க் ஹைஸ்கூல் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து வீரகேரளம் மூங்கில்புதூர் பஸ் நிறுத்தம் வரை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

நாகராஜ், கோவை.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பொள்ளாச்சி நகராட்சி 33-வது வார்டு பகுதியில் சாலைக்கு அடியில் பாதாள சாக்கடை குழாய்கள் செல்கிறது. இதற்காக சாலைக்கு மேல் மூடி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மூடி சில இடங்களில் சரிவர மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் சாலையில் பள்ளம் உருவானது போல காட்சி அளிக்கிறது. அந்த இடத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் மிகவும் அவதிப்பட வேண்டி உள்ளது. எனவே சாலையில் அமைக்கப்பட்டு உள்ள பாதாள சாக்கடை மூடிகளை முறையாக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செல்வம், பொள்ளாச்சி.

அடிப்படை வசதிகள்

கோவை மாநகராட்சி 25-வது வார்டில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் முதியவர்கள் உள்பட பலரும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால் அங்கு கழிப்பிட வசதி இல்ைல. மேலும் சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை. இதனால் பூங்காவுக்கு வந்து செல்பவர்கள் அவதிப்பட நேரிடுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பூங்காவில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தன்ராஜ், கோவை.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கோவை அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் அருகே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் கழிவுநீரை பீய்ச்சியடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு கால்வாய் அடைப்பை சரி செய்து, தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வசந்தகுமார், கோவை.


Next Story