இலுப்பூர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றப்போவது யார்?
இலுப்பூர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றப்போவது யார்? என்பது சுயேச்சை வேட்பாளரின் கையில் முடிவு உள்ளது.
அன்னவாசல்,
இலுப்பூர் பேரூராட்சி
இலுப்பூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இலுப்பூர் பேரூராட்சியில் உள்ள 7 வார்டுகளை தி.மு.க.வும், 3 வார்டுகளை அ.தி.மு.க.வும், 5 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் இலுப்பூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 8 வார்டுகளை கைப்பற்றும் கட்சிக்கு தலைவர் பதவி கிடைக்கும். ஆனால் தி.மு.க. 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரது ஆதரவை பெற தி.மு.க. முயன்று வருகிறது.
அரசியல் களம் சூடுபிடித்தது
அதே நேரத்தில் இலுப்பூர் அ.தி.மு.க. கோட்டை என்பதால் தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அமைந்துள்ள வார்டில் அ.திமு.க.வை சேர்ந்தவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் கூடுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு தலைவர் பதவி அ.தி.மு.க வசம் இருந்தது. இந்த நிலையில் தற்போது பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றப்போவது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என பரபரப்பாக பேசப்படுகிறது. தலைவர் பதவியை கைப்பற்றும் கட்சியே துணை தலைவர் பதவியை கைப்பற்றும் என்பதால் அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.
Related Tags :
Next Story