அவதூறாக பேசி அறையை பூட்டியதால் பரபரப்பு: ெநல்லை தாலுகா அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் சிறை வைப்பு கிராம நிர்வாக அலுவலருக்கு வலைவீச்சு
நெல்லை தாலுகா அலுவலகத்தில் கதவை பூட்டி பெண் ஊழியர்கள் சிறை வைத்ததாக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
நெல்லை, பிப்.27-
நெல்லை தாலுகா அலுவலகத்தில் கதவை பூட்டி பெண் ஊழியர்கள் சிறை வைத்ததாக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலர்
நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பால்ராஜ். இவருடைய மனைவி சாரதா (வயது 50). இவர் நெல்லை தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவில் முதுநிலை வரைவாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது நெல்லை துலுக்கர்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சூரியதேவன் என்பவர் வந்தார். அவர், சாரதாவிடம் ஒரு ஆவணம் குறித்து கேட்டார்.
சிறைவைப்பு
அதற்கு அவர் அந்த பிரிவில் பணியாற்ற கூடிய ஊழியர் விடுமுறையில் உள்ளார். அவர் பணிக்கு வந்த பின்னர் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சூரியதேவன், சாரதாவை அவதூறாக பேசி அலுவலக கதவை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சாரதா மற்றும் அவருடன் பணியாற்றிய மற்ற பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் சிறைவைக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பிற ஊழியர்கள் வந்து கதவை திறந்து பெண் ஊழியர்களை மீட்டனர். இதுகுறித்து நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
மேலும், இந்த சம்பவம் குறித்து சாரதா நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர் சூரியதேவன் மீது அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன் கூறுகையில், ‘நெல்லை தாலுகா அலுவலகத்தில் பெண் ஊழியர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கிராம நிர்வாக அலுவலர் சூரியதேவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. நெல்லை தாசில்தார் அறிக்கை சமர்ப்பித்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story