அடையாறு ஆற்றின் வடிகால்களில் சீரமைப்பு பணி


அடையாறு ஆற்றின் வடிகால்களில் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 27 Feb 2022 4:42 PM IST (Updated: 27 Feb 2022 4:42 PM IST)
t-max-icont-min-icon

அடையாறு ஆறுகளின் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட திரு.வி.க. மேம்பால ஆற்றங்கரை பகுதியில் ரூ.11.20 கோடியில் புதிதாக தடுப்பு வேலி மற்றும் தாவரங்களை நடவு செய்யும் பணிகளையும், ரூ.11.40 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா, விளையாட்டுத்திடல் ஆகிய பணிகளையும் ஆய்வு செய்து, பூங்காவில் கூடுதல் கழிப்பிட வசதிகளை அமைக்கவும், அந்த பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.11 கோடியில் 173-வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் நீரேற்று நிலையத்தின் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முதன்மை செயலாளர் டாக்டர் சுவர்ணா, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷு மஹாஜன், டாக்டர் எஸ்.மனிஷ், டி.சினேகா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story