தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது; கலெக்டர் செந்தில்ராஜ்


தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது; கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 27 Feb 2022 5:59 PM IST (Updated: 27 Feb 2022 5:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவை வருகிற 8-ந் தேதி முதல் 2 நாட்கள் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயிலரங்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வருகிற 8, 9-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆட்சி மொழி பயிலரங்கம் நடக்கிறது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தொடங்கி வைக்கிறார். இதில் ஆட்சிமொழி வரலாற்றுச் சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய ஆறு தலைப்புகளில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.
கருத்தரங்கம்
9-ந் தேதி மதியம் தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடக்கிறது. இதில் அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story