ஆங்காங்கே குண்டு சத்தம் கேட்பதால் பயத்தில் உள்ளனர் உக்ரைனில் பரிதவிக்கும் மாணவர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
ஆங்காங்கே குண்டு சத்தம் கேட்பதால் பயத்தில் உள்ளனர் உக்ரைனில் பரிதவிக்கும் மாணவர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
நாமக்கல்:
உக்ரைனில் ஆங்காங்கே குண்டு சத்தம் கேட்பதால் பயத்தில் உள்ளனர் என்றும், அங்கு பரிதவிக்கும் மாணவர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என்றும் அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 மாணவர்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் இளங்கோ. ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகன் சூர்யா (வயது 19). இவர் உக்ரைன் நாட்டில் டெனிபுரோ பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் பொள்ளாச்சி, கோவை, கவுந்தப்பாடி, நாமக்கல், மேச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அச்சம் அடைந்த சூர்யா தாயகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகிறார். இதற்கிடையே மாணவரின் பெற்றோர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கை சந்தித்து உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தங்கள் மகனை மீட்டு தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
பயமாக உள்ளது
இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கூறுகையில், சூர்யா கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் உக்ரைனுக்கு சென்றான். அங்கு தற்போது போர் பதற்றம் நிலவுவதை அறிந்து நாங்கள் சூர்யா மற்றும் பிற மாணவர்களை இந்தியா திரும்பி வருமாறு கூறினோம். அவர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கும்போதே போர் தொடங்கி விட்டது.
தற்போது டி.வி.யில் உக்ரைனில் குண்டு மழை பொழிவதை பார்க்கும்போது மிகவும் பயமாக உள்ளது. எங்களது மகன் மற்றும் பிற மாணவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விளக்குகளை அணைக்க வேண்டும்
இதற்கிடையே மாணவர் சூர்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோரிடம் அவர் கூறுகையில், உக்ரைனில் ஆங்காங்கே வெடி சத்தம் கேட்கிறது. ஆனால் நாங்கள் தங்கியிருக்கும் வீடு, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இதனால் இங்கு பாதிப்பு இல்லை. நான் தங்கியிருக்கும் நகரம் தலைநகரில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எங்கள் நகரத்தில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து விளக்குகளையும் அனைத்து விட வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி வைத்துள்ளோம். என்னுடன் படிக்கும் 8 மாணவ, மாணவிகள் யாரும் இந்திய அரசின் தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலந்து, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்திய நாட்டிற்கு அழைத்து செல்வதை அறிந்து சற்று நிம்மதி அடைந்திருக்கிறோம். விரைவில் நமது நாட்டிற்கு திரும்பி வர ஆவலோடு காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ெமட்ரோ ரெயில் நிலையம்
இதேபோல் திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சி அருகே உள்ள மாம்பாளையம் முல்லைமணிக்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி- பர்வதம் தம்பதியின் மூத்த மகள் ஜனனி. இவர் உக்ரைன் நாட்டில் ஒலிவிஸ்காவில் உள்ள கார்கியூ நேஷனல் மருத்துவ பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அங்கு போர் தொடங்கி நடந்து வருவதால் அச்சம் அடைந்துள்ள பெற்றோர் மகள் ஜனனியை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனனியுடன் தொலைபேசியில் பேசிய பெற்றோரிடம் அவர், நான் உள்பட 200 பேர் ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் தங்கி இருப்பதாகவும், தற்போது வரை உணவு, தண்ணீர் கிடைத்து வருகிறது. அவ்வப்போது குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதால் அச்சமான மனநிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story