அரும்பாக்கத்தில் குளியல் அறையில் தாயுடன் வழுக்கி விழுந்த 1 வயது குழந்தை பலி


அரும்பாக்கத்தில் குளியல் அறையில் தாயுடன் வழுக்கி விழுந்த 1 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 28 Feb 2022 4:45 PM IST (Updated: 28 Feb 2022 4:45 PM IST)
t-max-icont-min-icon

குளியல் அறையில் தாயுடன் சேர்ந்து வழுக்கி விழுந்த 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வழுக்கி விழுந்த குழந்தை

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 29). இவர், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் விசிகா என்ற மற்றொரு பெண் குழந்தையும் இருந்தது. நேற்று முன்தினம் குழந்தை விசிகாவை தூக்கிக்கொண்டு கவிதா, வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார். அப்போது திடீரென குளியல் அறையில் இருந்த தண்ணீரில் கால் வழுக்கியதால் கவிதா, இடுப்பில் இருந்த குழந்தையுடன் கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

சாவு

இதில் குழந்தை விசிகாவின் தலையில் படுகாயம் அடைந்து மயங்கி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, குழந்தையை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை விசிகா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. அரும்பாக்கம் போலீசார், பலியான குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story