கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2022 5:30 PM IST (Updated: 28 Feb 2022 5:30 PM IST)
t-max-icont-min-icon

பழுது நீக்கப்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இந்திய அணுமின் கழகம் நிர்வகிக்கும் சென்னை அணுமின் நிலையம் மற்றும் இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையம் ஆகியவை இயங்கி வருகிறது. இங்கு மின் உற்பத்திக்காக 2 அலகுகளில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலகின் வினைகலன் பழுதடைந்து தற்போது வரை இயங்காமல் முடங்கி உள்ளது. 2-ம் அலகு மூலம் மட்டுமே மின்சாரம் உற்பத்தியாகி வந்த நிலையில் 2-ம் அலகின் நீராவி கடத்தும் குழாய் வால்வில் திடீர் பழுது காரணமாக 16-ந் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தற்போது பழுது நீக்கப்பட்டு நேற்று முதல் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. முதல் கட்டமாக 170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இவை படிப்படியாக உயர்த்தப்பட்டு முழு அளவான 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story