வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைக்கடையில் நகை திருட்டு


வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைக்கடையில் நகை திருட்டு
x
தினத்தந்தி 28 Feb 2022 5:58 PM IST (Updated: 28 Feb 2022 5:58 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து 2½ பவுன் நெக்லசை திருடிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பஜார் வீதியில் உள்ள ஒரு நகை கடையில் நேற்று முன்தினம் ‘டிப்-டாப்’ உடை அணிந்து 3 பெண்கள் சென்றனர். பின்னர் திருமணத்திற்கு நகை எடுக்க வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உள்ளனர். இதனால் கடை ஊழியர் கம்மல், மூக்குத்தி, மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளை எடுத்து காட்டி உள்ளார்.

அப்போது கடைக்காரரிடம் வேறு நகையை கொண்டு வரச்சொல்லி கவனத்தை திசை திருப்பி உள்ளனர். அப்போது அந்த பெண்களில் ஒருவர் 2½ பவுன் தங்க நெக்லசை எடுத்து புடவையில் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் 3 பேரும் தங்களுக்கு பிடித்த நகைகள் இங்கு இல்லை என்று கூறி நகை வாங்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

போலீஸ் விசாரணை

பின்னர் கடைக்காரர் அவர்களுக்கு எடுத்த காண்பித்த நகைகளை சரிபார்த்தபோது 2½ பவுன் நெக்லஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ததில் 3 பெண்களில் ஒருவர் நகையை திருடி புடவையில் மறைத்து திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கல்பாக்கம் போலீசில் நகைக்கடை உரிமையாளர் கண்காணிப்பு கேமரா பதிவுடன் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களை தேடி வருகின்றனர்.


Next Story